‘கொரோனாவுக்கு பின்னர் வழக்குகள் தேங்கிக்கிடக்கும்’ – தலைமை நீதிபதி போப்டே பேச்சு

Spread the love

கொரோனாவுக்கு பின்னர் வழக்குகள் வெள்ளமென தேங்கிக்கிடக்கும் என்று நீதிபதி பானுமதி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே கூறினார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக விளங்கி, சமீபத்தில் பணி நிறைவு செய்த தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி, ‘நீதித்துறை, நீதிபதிகள், நீதி நிர்வாகம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்த புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வெளியிட்டு பேசினார். அப்போது அவர், “இந்த புத்தகம் தனித்துவமானது. இது நீதித்துறையின் மகத்தான நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது” என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் நீங்கி, முடக்கங்கள் அனைத்தும் நீக்கப்படும்போது, நாங்கள் வெள்ளமென தேங்கும் வழக்குகளை எதிர்கொள்ளப்போகிறோம். வழக்கமான வழியில் விரிவான நடைமுறையை பின்பற்றிச்சென்றால், இதில் நாங்கள் எவ்வாறு தீர்வு காணப்போகிறோம் என்பது எனக்கு தெரியவில்லை. இது நாம் அனைவரும் சமாளிக்க மனதில் கொள்ள வேண்டிய ஒன்று.

பல விஷயங்களை தீர்க்க மத்தியஸ்தம், முன் வழக்கு மற்றும் பின் வழக்குக்கு பிந்தைய மத்தியஸ்தத்தை பயன்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது.

கொரோனா பெருந்தொற்று நோயை பொறுத்தமட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று பற்றி மிகவும் சங்கடமான கணிப்புகள் இருக்கின்றன. ஆனால் நான் நம்பவில்லை. அது நடக்காது என்றே உண்மையில் நம்புகிறேன்.

இந்த பெருந்தொற்று நோய் மக்கள் மத்தியில் 2 விஷங்களை கொண்டு வந்துள்ளது. ஒன்று மனச்சோர்வு போக்கு. இன்னொன்று, தேவையற்ற ஆக்கிரமிப்பு. நாம் நமது ஆற்றலை மனநலத்துக்காக அர்ப்பணிக்க வேண்டிய தருணம் இது. மனநல பிரச்சினையை கையாள்வதற்கும், தொழில்முறை மனநல ஆலோசனைகளை வழங்குவதற்கும், சுப்ரீம் கோர்ட்டு ஒரு முன்முயற்சியை எடுத்துள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டின் தலைமைச்செயலாளர் விரைவில் அறிவிப்பார்.

நீதித்துறை நமது நாட்டுக்கானது. அரசியலலைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கி தேசத்தை நகர்த்தி செல்வதை உறுதி செய்வதே நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அதை அடைவதற்கு நீதித்துறை சுதந்திரம் அத்தியாவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page