மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம்; நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை மந்திரி தகவல்

Spread the love

மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.


புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று நாடாளுமன்றத்தில் கொரோனா பரவல் குறித்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 414 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆகவும் உள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம் ஆகும். 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இது 77.65 சதவீதம் ஆகும்.

நாட்டில் மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா, அசாம், கேரளா, குஜராத் ஆகிய 12 மாநிலங்கள் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 10 கோடியே 84 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த மாத்திரைகளை 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுஷ் அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மிதமான நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆயுஷ் மருந்தை பரிந்துரைப்பதற்கான திட்டம் உள்ளது.

உலகம் முழுவதும் 2 கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 9 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், சாவு 3.2 சதவீதமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,328 பேர் பாதிக்கப்படுகிறார்கள். 55 பேர் இறக்கிறார்கள். இது உலக அளவில் ஒப்பிடும் போது மிகவும் குறைவு ஆகும்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரிடம் இருந்து 1 முதல் 14 நாட்களுக்குள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் 30-க்கும் அதிகமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பல்வேறு நிலையில் இருந்த போதிலும் 3 தடுப்பூசிகள் ஒன்றாவது, இரண்டாவது மற்றும் 3-வது கட்ட சோதனையில் உள்ளன. கொரோனா தடுப்பு மருந்தை வாங்கவும், வினியோகிக்கவும் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.

உலக அளவில் சுமார் 145 தடுப்பு மருந்துகள் சோதனைக்கு முந்தைய கட்டத்திலும், 35 தடுப்பு மருந்துகள் சோதனை கட்டத்திலும் உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா உலக சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு மற்ற நாடுகளுக்கும் உதவி வருகிறது. இவ்வாறு மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள், பரிசோதனைகள், ஊரடங்கை அமல்படுத்தியது, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வர செய்த ஏற்பாடுகள் போன்ற விவரங்களையும் அவர் தனது உரையின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page