‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள்-கல்வித்துறை தகவல்

Spread the love

‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

சென்னை,

நீட் தேர்வு கடந்த 13 ந் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர் தேர்வு எழுத விண்ணப்பித்ததில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடத்தப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) பாதுகாப்பாக தேர்வை நடத்தி முடித்துள்ளது.

நீட் தேர்வில் பொதுவாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தின் கீழ் அதிகம் வினாக்கள் கேட்கப்படுகின்றன என்றும், இதனால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எளிதாக தேர்வை சந்தித்து விடுகின்றனர் என்றும் பரவலான பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அதற்கேற்றாற்போல் சமீபத்தில் தான் பள்ளி கல்வித்துறை, போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக பள்ளிகளில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தது. அதன்படி, பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த 2018 19 ம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த 2019 20 ம் கல்வியாண்டிலும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடப்புத்தகங்களை விட, மாநில பாடப்புத்தகங்களில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் கடந்த 2 தினங்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீட் தேர்வு 720 மதிப்பெண்ணுக்கு மொத்தம் 180 வினாக்கள் (ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள்) கேட்கப்படும். அதில் 90 வினாக்கள் உயிரியல் பாடத்தில் இருந்தும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் இருந்து தலா 45 வினாக்களும் கேட்கப்படும்.

அதன்படி, நடைபெற்று முடிந்த தேர்வில் உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்டு இருந்த 90 வினாக்களில் 87 வினாக்களும், இயற்பியலில் 45 வினாக்களில் 43 வினாக்களும், வேதியியலில் 45 வினாக்களில் 44 வினாக்களும் மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page