மத்திய மந்திரி அனுராக் தாகூர் கருத்தால் சர்ச்சை ‘பி.எம்.கேர்ஸ் நிதி’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவை பலமுறை ஒத்திவைப்பு

Spread the love

பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (குறிப்பிட்ட வழிமுறைகள் தளர்வு மற்றும் திருத்தம்) மசோதா 2020-ஐ நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டு இருந்த அவசர சட்டத்துக்கு பதிலாக தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதி மசோதா, வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு, பான்-ஆதார் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை வரி செலுத்துவோருக்கு வழங்க வகை செய்யும். இந்த மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசும்போது, இந்த மசோதா வெறும் வரி வசூல், வருமான வரி தாக்கல் போன்றவற்றுக்கானது என்றும், இதை எதிர்ப்போர் மசோதா குறித்து தவறான புரிந்துணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

 

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை வழங்கும் விவகாரம் குறித்து அவர் பேசும்போது, ‘மாநிலங்களின் அதிகாரங்களை நாங்கள் பறிக்கவில்லை. எங்கள் கடமைகளில் இருந்தும் நாங்கள் விலகவும் இல்லை. ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்கான பங்கை வழங்கமாட்டோம் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நிச்சயம் அந்த பங்கை நாங்கள் வழங்குவோம்’ என்று தெரிவித்தார்.

வெற்றிகரமான முதல்-மந்திரியாக இருந்துள்ள பிரதமர் மோடிக்கு, மாநிலங்களின் பிரச்சினைகளும், அவற்றுக்கான தேவையும் நன்கு தெரியும் என கூறிய நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் மற்றும் ஜி.எஸ்.டி. சட்டத்தை மத்திய அரசு மீறவில்லை என்றும் கூறினார்.

பின்னர் கொரோனா போன்ற நெருக்கடி காலத்தை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் அவையில் விளக்கினார். அப்போது பி.எம்.கேர்ஸ் நிதியை எதிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகளை கடுமையாக குறைகூறினார்.

அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சிலர் பி.எம்.கேர்ஸ் நிதியை எதிர்த்து போராடுகிறார்கள். இதற்கு எதிராக பலமுறை கோர்ட்டுகளுக்கு சென்றும், கோர்ட்டுகள் இந்த நிதியை ஆதரித்தே தீர்ப்பு அளித்து இருக்கின்றன. ஏழை, எளிய மக்கள் கூட பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்து உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியவாறே இருக்கின்றன’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும் முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிய பிரதமர் தேசிய நிவாரண நிதி தொடர்பாகவும் அவர் பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி உருவாக்கிய பி.எம்.கேர்ஸ் நிதி அரசியல்சாசன முறைப்படி ஒரு பொது அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் பிரதமர் தேசிய நிவாரண நிதி ஒரேயொரு குடும்பத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. அது நேரு-காந்தி குடும்பம்’ என்று கூறினார்.

அனுராக் தாகூரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அனுராக் தாகூர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தணிக்கையில் இருந்து விலக்கு அளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதைப்போல, இந்த நிதியை கலைத்துவிட்டு, இதில் உள்ள பணத்தை பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் வலியுறுத்தினார்.

இவ்வாறு பி.எம்.கேர்ஸ் நிதி விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாலை 6 மணி வரை 4 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பின்னர் மக்களவை மீண்டும் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்தார். அவர் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் சிறப்பாக நடந்தன. உறுப்பினர்கள் அனைவரும் விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தனர். உறுப்பினர்கள் யாரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறாமல், அவையின் மாண்பை பாதுகாக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களையும் பாதுகாப்பது எனது கடமையாகும்’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மந்திரி அனுராக் தாகூர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். யாருக்கும் வருத்தம் ஏற்படும் வகையில் அந்த கருத்தை தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதனால் அமைதி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அவை நடவடிக்கைகள் சீராக நடைபெற ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஒரு பாதுகாவலரைப்போல நடந்து கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாராட்டும் தெரிவித்தார்.

இதைப்போல சபாநாயகரின் செயலுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் புகழாரம் சூட்டினார். பின்னர் அவை நடவடிக்கைகள் வழக்கம் போல நடந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page