பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றார்.

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றார். தொடர்ந்து அவர் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அல் அஜிசியா மற்றும் அவென்பீல்டு சொத்து ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 15-ந்தேதி தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பை வரும் 22-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளருக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உதவி பதிவாளர் உத்தரவிட்டு, கடிதம் எழுதி உள்ளார்.
நவாஸ் ஷெரீப்பை கைது செய்வதற்கான நடவடிக்கையை லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் வெளியுறவுத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நவாஸ் ஷெரீப் மீதான இஸ்லாமாபாத் ஐகோர்ட்டின் பிடி இறுகியுள்ளது.