வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். இதில் இருவரும் இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே தண்ணீர் கேன் வியாபாரி காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் நாம் தமிழர் கட்சி கொம்மடிக்கோட்டை பஞ்சாயத்து செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வன் தவறி விழுந்தார். உடனே காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், செல்வனை தூக்கி காரில் கடத்திச்சென்று அடித்துக்கொலை செய்தது. பின்னர் அவரது உடலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கடக்குளம் காட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பிச்சென்றது. இதுபற்றி அறிந்ததும், தட்டார்மடம் போலீசார் விரைந்து சென்று, செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத் (77), திசையன்விளை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-
எங்களுக்கு சொந்தமான தோட்டம் தட்டார்மடம் அருகே படுக்கப்பத்து-காந்திநகர் மெயின் ரோடு பகுதியில் உள்ளது. எங்களது தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தை பக்கத்து ஊரான உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த திருமணவேல் என்பவர் வாங்கி தனது மனைவி லிங்ககனியின் பெயரில் கிரையம் செய்தார்.
அப்போது எங்களுக்கு சொந்தமான 1¾ ஏக்கர் நிலத்தையும் சேர்த்து திருமணவேல் அடைத்து விட்டார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எங்களுக்கும், திருமணவேலுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.
பின்னர் எங்களது நிலத்தை அபகரிக்கும் வகையில், திருமணவேல் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் துணையுடன், எனது மகன்கள் செல்வன், பங்காரு ராஜன் என்ற ராஜன், பீட்டர் ராஜா ஆகியோர் மீது பல்வேறு பொய் புகார்கள் கொடுத்து, அதன்பேரில் வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்தினர்.
இதற்கிடையே, எங்களது தோட்டத்தில் திருமணவேல் நாட்டு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தியது தொடர்பாக, தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், அந்த புகாரை வாங்க மறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், எனது மகன்கள் மீது பொய் புகார் பதிவு செய்தார். பின்னர் எனது மகன் பீட்டர் ராஜாவின் லாரியை பறிமுதல் செய்து, பீட்டர் ராஜாவையும் அடித்து துன்புறுத்தினார்.
திருமணவேல் தரப்பினர், எனது மகன் பங்காரு ராஜனை அடித்து காயப்படுத்தினர். மேலும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பங்காரு ராஜனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் அழைத்து சென்று, போலீஸ் நிலையத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு அடித்து சித்ரவதை செய்து சிறையில் அடைத்தார். பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த மகன், சென்னை மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதனால் திருமணவேல் தூண்டுதலின்பேரில், எனது மகன்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் பொய் வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தினார். இதனால் எனது மகன்கள் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் வேண்டி, மனுதாக்கல் செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தாக்கியது தொடர்பாக, எனது மகன் பங்காரு ராஜன், ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதனை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில், எனது மகன் செல்வனை திருமணவேல் அடியாட்களுடன் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல், அவரது அடியாட்கள் மீது வழக்குப்பதிவு செய்து, எனக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சம்பவம் நிகழ்ந்த இடம் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருந்ததால், இதுகுறித்து திசையன்விளை போலீசார், உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மற்றும் சிலர் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (ஆள் கடத்தல்), 302 (கொலை) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விவசாயியான திருமணவேல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி தலைவராகவும் உள்ளார். செல்வன் கொலை வழக்கு தொடர்பாக அரசூர் பூச்சிக்காட்டைச் சேர்ந்த முத்துராமலிங்கம், சின்னத்துரை, சொக்கன்குடியிருப்பை சேர்ந்த ராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான திருமணவேல் மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையாளிகள் அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில், 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். செல்வன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, செல்வனின் குடும்பத்தினர், நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் நேற்று திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், செல்வனின் உடலை வாங்க மறுத்து மாலையில் அவர்கள், திசையன்விளை போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நிருபர்களிடம் கூறியதாவது:-
வியாபாரி செல்வன் கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனுக்கு கொலை சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து, முழுமையான தகவல்கள் திரட்டப்படும், ஆதாரங்களும் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.