கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Spread the love

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக கொட்டி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

 

அதேபோல, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழுகொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 337 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதேபோல, கபினி அணையில் நேற்று காலை 2,279 அடி தண்ணீர் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி வழியாகவும், கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கபிலா ஆறு வழியாகவும் சென்று டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் ஒன்றிணைந்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 65,337 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதேபோல் நீலகிரி மாவட்டம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள பில்லூர் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் நீர்மட்டம்97 அடியாக உயர்ந்தது.

எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகள் திறக்கப்பட்டன. அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page