பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவரை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் அப்போதிலிருந்தே குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் இம்ரான்கான் தலைமையிலான நிர்வாகம் திறமையில்லாத, மோசமான நிர்வாகம் என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கூறி வரும் எதிர்க்கட்சிகள் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தும் நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்த நாட்டின் முக்கிய எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுதொடர்பாக பாகிஸ் தான் மக்கள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் மாநாடு நடைபெற்றது.
இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான 26 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை ஏற்பாடு செய்ய “பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்” என்ற கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டணி சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை 3 கட்டங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்ரான்கான் அரசை வெளியேற்றுவது மட்டுமின்றி வெளிப் படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதிசெய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடைபெறும் என கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “எங்களின் (எதிர்க்கட்சிகளின்) போராட்டம் இம்ரான்கானுக்கு எதிராக அல்ல. மாறாக அவரை போன்ற ஒரு திறமையற்ற மனிதனை ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை அழிப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கு எதிரானது. பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் இருந்து விலகி, நாட்டின் தந்தை முகமது அலி ஜின்னாவின் அரசியல் அமைப்பையும் பார்வையும் பின்பற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசியலில் மாற்றம் கொண்டுவரப்படாவிட்டால் அது இந்த நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை கொடுக்கும்” என கூறினார்.