குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும்: ‘பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ மத்திய அரசு வேண்டுகோள்

Spread the love

குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்; பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிற நிலையில், நவராத்திரி கொண்டாட்டம் வரும் 17-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி தசரா, அடுத்த மாதம் 14-ந் தேதி தீபாவளி, டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் என தொடர்ந்து பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

பண்டிகைகள் வந்தாலும், கொரோனா காலத்துக்கு ஏற்ப, உஷாராக இருக்க வேண்டுமே தவிர கோலாகல கொண்டாட்டத்தில் தீவிரமாக இறங்கி விடக்கூடாது என்று வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் ‘சண்டே சம்வத்’ தளத்தின் மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்டிகைகளை அனைவரும் வீடுகளுக்குள்ளேயே, தங்களுக்கு அன்பானவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பண்டிகையின் பெயரால் வெளியே கண்காட்சிகள், பந்தல்கள் என்று யாரும் செல்லக்கூடாது.

இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதுதான் அனைவரின் முதன்மையான தர்மமாக இருக்க வேண்டும்.

நாட்டின் சுகாதார மந்திரி என்ற வகையில் கொரோனா வைரஸ் தொற்றை தணிப்பதும், உயிரிழப்புகளை தடுப்பதும்தான் எனது தர்மமாக இருக்கிறது. பகவத் கீதை, போர் வீரர் வர்க்கத்துக்கான போரை மன்னிக்கிறது. எனவே உங்கள் நம்பிக்கையையோ அல்லது உங்கள் மதத்தையோ நிரூபிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் கூடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அசாதாரணமான சூழ்நிலைகளில், அசாதாரணமான பதில்கள்தான் முக்கியம்.

எந்த மதமும், எந்த கடவுளும் நீங்கள் ஆடம்பரமான முறையில்தான் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றோ, பிரார்த்தனை செய்வதற்கு நீங்கள் பந்தல்களுக்கும், கோவில்களுக்கும்தான் செல்ல வேண்டும் என்றோ கூறவில்லை. எனவே பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

அவசர கால உபயோகத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு, நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் விவரங்கள் தேவைப்படுகின்றன. வரக்கூடிய விவரங்களைப் பொறுத்துத்தான் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

கொரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ். குளிர்கால நிலையில், இந்த வைரஸ்களின் பரவுதல் அதிகரிக்கும் என தெரிகிறது.

குளிர்கால நிலை, குறைந்த ஈரப்பதம் உள்ள சூழலில் சுவாச வைரஸ்கள் நல்ல வளர்ச்சியை பெறுகின்றன. எனவே மனதில் அனைவரும் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் உண்டு. அது, குளிர்காலத்தில், குடியிருப்புகளில் அதிகமாக கூட்டம் கூடுகிறபோது பரவல் அதிகரிக்கலாம் என்பதுதான். எனவே இந்திய சூழலில், குளிர்காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று கருதுவது தவறல்ல.

பெலுடா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக பெலுடா பரிசோதனை முறை எப்போது வரும் என்ற கேள்வி இருக்கிறது. சி.எஸ்.ஐ.ஆரின் ஐ.ஜி.ஐ.பி. அமைப்பு உருவாக்கி உள்ள இந்த பரிசோதனையை வணிக அடிப்படையில் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது அனுமதியை வழங்கி உள்ளது.

இந்த பரிசோதனை முறை அடுத்த சில வாரங்களில் வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page