இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 66 ஆயிரமாக குறைந்துள்ள நிலையில், தினசரி பலி எண்ணிக்கையும் 816 ஆக சரிந்தது.

புதுடெல்லி,
சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய நிலையில், இந்தியாவில் கடந்த ஜனவரி இறுதியில் கேரள மாநிலத்தில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து படிப்படியாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தனது கொடூர கரங்களை பரப்பியது.
கடந்த சுமார் 9 மாதங்களாக நாட்டில் வேகமாக பரவி வரும் தொற்று காரணமாக தினமும் சில பத்தாயிரங்களில் புதிய தொற்றுகளை நாடு பெற்று வருகிறது. அதுவும் இந்த தினசரி பாதிப்பு கடந்த மாதத்தில் 1 லட்சத்தை தொடும் அளவுக்கே சென்றுவிட்டது.
எனினும் பின்னர் அது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 70 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பாகவே இருந்தது. ஆனால் இதில் இருந்தும் நேற்றைய பாதிப்பு குறைந்திருக்கிறது.
அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 66 ஆயிரத்து 732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதைப்போல நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையும் சரிவடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக 900-க்கு மேற்பட்ட பலி எண்ணிக்கையை பெற்று வந்த இந்தியா, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 816 மரணங்களையே கொரோனாவால் பெற்று இருக்கிறது.
இவ்வாறு புதிய பாதிப்புகளும், மரணங்களும் குறைய தொடங்கி இருப்பது மருத்துவ வட்டாரங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக மாறியுள்ளது. இதைப்போல கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய- மாநில அரசுகளுக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
அதேநேரம் நாட்டில் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நேற்றும் தொடர்ந்தது.
மேற்படி 24 மணி நேரத்தில் 66,732 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகிய நிலையில், இந்த காலகட்டத்தில் 70 ஆயிரத்து 159 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 61 லட்சத்து 49 ஆயிரத்து 534 ஆகி விட்டது.
இதனால் குணமடைந்தோர் விகிதம் 86.36 சதவீதமாக அதிகரித்து விட்டது. அதேநேரம் நாட்டின் கொரோனா பலி விகிதம் 1.53 ஆக சரிந்து உள்ளது. இதைப்போல நாட்டில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 12.10 சதவீதமாகவே இருக்கிறது.
தற்போதைய நிலையில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 853 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 4 நாட்களாக 9 லட்சத்துக்கும் கீழே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக குணமடைந்தவர்களில் 77 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குணமடைந்தவர் களை பெற்று மராட்டிய மாநிலம் முன்னணியில் உள்ளது.
இதைப்போல புதிய பாதிப்புகளிலும் மராட்டிய மாநிலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை கொண்டுள்ளது. அடுத்ததாக கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தலா 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளை பெற்றுள்ளன. புதிய பாதிப்புகளிலும் 81 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 851 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் நேற்று முன்தினம் வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.