நெல் கொள்முதல் கள நிலவரம் அறியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்: அமைச்சர் காமராஜ் அறிக்கை

Spread the love

நெல் கொள்முதல் கள நிலவரங்கள் ஏதும் அறியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாய நலன்களில் அ.தி.மு.க. அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. பொதுவாக 1,500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், 2019-2020 பருவத்தில் வரலாறு காணாத வகையில் 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் செய்து அரசு சாதனை படைத்துள்ளது.

கொள்முதல் நிலையங்களில் அனைத்து விவசாயிகளிடம் இருந்து ஊரடங்கு காலத்தில் மட்டும் 12.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து, இதன் மூலம் மொத்தம் 2,416.05 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 518 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்பதால், நெல் வரத்து கூடுதலாக இருக்கும் இடங்களில், கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை எவ்வித உச்ச வரம்பின்றி முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50,000 நெல் மூட்டைகள் சேதம் என்று கூறியிருக்கிறார். ஆனால், கொள்ளிடம் பகுதியில் இந்த கொள்முதல் பருவத்தில் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 7,037 டன் நெல் (1,75,925 நெல் மூட்டைகள்) கொள்முதல் செய்யப்பட்டு, தொடர்ந்து கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, 1.10.2020 அன்று தொடங்கியுள்ள 2020-2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1,835-லிருந்து ரூ.1,888 ஆகவும் மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,815-லிருந்து ரூ.1,868 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இத்துடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70-ம் மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50-ம் வழங்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,918 வழங்கப்பட்டு வருகிறது. .

நெல் கொள்முதல் உண்மை நிலவரங்கள் இவ்வாறாக இருக்க, கள நிலவரங்கள் பற்றி ஏதும் அறியாமல், விவசாயிகளிடம் அ.தி.மு.க. அரசு பெற்று வரும் நற்பெயர் கண்டு பொறுக்க முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறிவருவது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர் விடுக்கும் அறிக்கை மட்டுமே என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page