மசாஜ் மையம், மதுபானக்கூட வசதிகளுடன் மீண்டும் வருகிறது ‘தங்கரதம்’ சொகுசு ரெயில் – ஜனவரி மாதத்தில் இயக்கம்

Spread the love

மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் மீண்டும் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரெயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது.

புதுடெல்லி,

ஆடம்பர சுற்றுலா பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரெயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்தநிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரெயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது.

ரெயிலில், தங்கும் அறைகள் புதுப்பித்து அலங்கரிக்கப்பட்டு உள்ளன. குளியல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டி.வி. வசதி செய்யப்பட்டு உள்ளது. அதில் ‘நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார்’ போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தீ எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டு உள்ளது.

பயணிகளின் மன மகிழ்வுக்காக மசாஜ் சென்டர், உள்நாட்டு மதுபானங்கள் அடங்கிய மதுபானக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நவீன எந்திரங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடமும் உள்ளது. இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உணவு உண்ணும் வகையில் ‘ருசி’ மற்றும் ‘நளபாகம்’ என்ற பெயரில் 2 உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த சொகுசு ரெயிலை கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதன்படி ‘பிரைடு ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக இயங்கும் ரெயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் மற்றும் கோவாவுக்கு செல்கிறது. ‘ஜுவல் ஆப் சவுத்’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘கிளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 4 நாள் பயணமாக இயங்கும் ரெயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் செல்கிறது.

இந்த ரெயில் பயணத்துக்கு கட்டணச்சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பஸ் பயன்பாடு, சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணங்கள், மதுபானக்கூடத்தை பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டணம் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை பயணிகள் அறிந்துகொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று, ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page