மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கண்கலங்கிய நீதிபதி

Spread the love

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு பதிலைக் கேட்ட நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியபடி தனது கருத்தை தெரிவித்தார்.

மதுரை,

அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை இந்த வருடமே அமல்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரந்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தெரிவித்த தகவல்களைக் கேட்ட மதுரை நீதிமன்ற நிர்வாக நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார். இன்றைய வழக்கு விசாரணையின் போது பேசிய அவர், “கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது. அவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அரசு மறுக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது” என்று கண்கலங்கியபடி தனது கருத்தை தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அமைச்சரவை இந்த மசோதாவை தமிழக ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. தற்போது வரை அந்த சட்ட மசோதா ஆளுநரின் பரிசிலனையில் தான் உள்ளது.

எனவே இது குறித்து ஆளுநரிடம் கேட்டு பதில் தெரிவிக்குமாறு, ஆளுநரின் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என்றும் காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது தான் நீதிபதி கண் கலங்கி இந்த கருத்தைத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எப்போது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கும்? மருத்துவக் கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை இன்று மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page