தமிழகத்தில் சாலை விபத்துகள் 25 சதவீதம் குறைந்தது- நிதின் கட்காரி

Spread the love

நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் 1½ லட்சம் பேர் பலியாகிறார்கள்.

அமராவதி,

தமிழகத்தில் சாலை விபத்துகளும், அது தொடர்பான மரணங்களும் 25 சதவீதம் குறைந்திருப்பதற்காக மாநில அரசுக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆந்திராவில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் நாடு முழுவதும் விபத்துகளை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் 1½ லட்சம் பேர் பலியாகிறார்கள். எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சாலை விபத்துகளை நாம் குறைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

இந்த விவகாரத்துக்கு நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். இந்த பணியில் உங்களுக்கு நான் உதவுவேன்.

தமிழக அரசு சாலை விபத்துகளையும், அது தொடர்பான மரணங்களையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும். நீங்கள் (பிற மாநிலங்கள்) விபத்து குறைப்புக்காக திட்டம் மற்றும் நடவடிக்கை எடுத்தால், அதற்கு தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அவர்களை பின்பற்றலாம்.

அதேநேரம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்த விவகாரத்தில் நமக்கு உதவுகின்றன. விபத்துப்பகுதிகளை (கறுப்பு பகுதிகள்) மேம்படுத்துவதற்காக ரூ.14 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு அவை தயாராக இருக்கின்றன.

ஆந்திராவில் நெடுஞ்சாலையில் 435 கறுப்பு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதில் 295 இடங்களில் தற்காலிக சீர்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்துள்ளன. 150 இடங்கள் நிரந்தரமாக சீர்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களில் தற்காலிக பணிகள் இந்த ஆண்டும், நிரந்தர பணிகள் அடுத்த ஆண்டுக்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சாலை மேம்பாடு மற்றும் விபத்து குறைப்பு நடவடிக்கைகளுக்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். எனது பரிந்துரை என்னவெனில் ஒரு பணியாக மற்றும் ஒரு சவாலாக இதை நீங்கள் மேற்கொண்டால், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என என்னால் 100 சதவீதம் உறுதி கூற முடியும். மக்களுக்கு அது மிகப்பெரும் விஷயமாகவும் இருக்கும்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page