அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதி கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகளை விவாதம் நடத்தும் குழு அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் வியாழக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதிக்கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி15 நிமிட கால அளவில், 6 பிரிவுகளாக நடைபெறும் விவாதத்தின் போது முதல் 2 நிமிடங்கள் இரண்டு வேட்பாளருக்கும் தடையின்றி பேச அனுமதி வழங்கப்படும். ஒருவர் பேசும் போது மற்றொருவரின் மைக் அணைக்கப்படும்.
இந்த வழிமுறை, அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதத்தை நடத்தும் குழுவில் இடம் பெற்றவர்கள் ஏகமனதாக எடுத்து முடிவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நான்கு நிமிடத்திற்கு பின்னர் கேள்விகளுக்கான நேரம் தொடங்கும் போது இருவரின் மைக்குகளும் செயல்படத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய விதிக்கு டிரம்ப் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விவாதத்தில் டிரம்ப் பங்கேற்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முதல் விவாதத்தின் போது, ஜோ பைடனை பேச விடாமல், அதிபர் தொடர்ந்து குறுக்கிட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.