என்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 925 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. அதில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 4 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது. மொத்தம் 461 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஒவ்வொரு கட்ட கலந்தாய்வும் 9 நாட்கள் நடக்கிறது. அதில் முதல் 4 நாட்கள் முன்பணம் செலுத்தவும், விருப்ப இடங்களை தேர்வு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீட்டுக்கும், ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கும் 2 நாட்கள் மற்றும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை இறுதி நாளும் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 16-ந்தேதி நிறைவு பெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் 12 ஆயிரத்து 263 பேர் அழைக்கப்பட்டதில், 7 ஆயிரத்து 510 பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர்.
அதேபோல், 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த 12-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்று இருக்கிறது. இதற்கு 22 ஆயிரத்து 904 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 13 ஆயிரத்து 415 பேர் மட்டுமே இடங்களை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். மொத்தத்தில் 2 கட்ட கலந்தாய்வு நிறைவில் 20 ஆயிரத்து 925 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்தது. அதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வரை சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை பார்க்கையில் அது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது 3 மற்றும் 4-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 3-ம் கட்ட கலந்தாய்வுக்கு 35 ஆயிரத்து 133 பேரும், 4-ம் கட்ட கலந்தாய்வுக்கு 40 ஆயிரத்து 573 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.