நாளொன்றுக்கு 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன – அமைச்சர் காமராஜ்

Spread the love

விவசாயிகள் விளைவிக்கும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.


சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

உணவுத்துறையின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 2002-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் நாம் மத்திய அரசின் நெல் முகவராக செயல்படுகிறோம்.

கடந்த காரீப் காலத்தில் அதாவது செப்டம்பர் இறுதிவரை 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ.6,130 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குக்கு ஒரே நாளில் செலுத்தப்பட்டது.

அக்டோபர் 1-ந் தேதி குறுவை காலம் தொடங்கும். அன்று தொடங்கி 20 நாட்களில் 842 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் அதாவது 60 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2009-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 20 நாட்களில் 6 லட்சம் மூட்டை நெல்லை மட்டுமே கொள்முதல் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில் அவர்களைவிட 10 மடங்கு அதிக நெல் கொள்முதல் செய்துள்ளோம்.

நெல்கொள்முதல் செய்யும் போது 16 சதவீத ஈரப்பதம் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை 22 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம். ஓரிரு நாளில் அதற்கான கமிட்டி வரவுள்ளது.

ஆனாலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதலை நாங்கள் வாங்காமல் இருக்கவில்லை. ஈரப்பதம் கூடுதலாக இருந்தாலும் அதை கொள்முதல் செய்து உடனடியாக அரவைக்கு அனுப்பிவிடுகிறோம். தற்போது விளைச்சல் மிக அதிகமாகிவிட்டது.

நாளொன்றுக்கு 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு பெரிய டாரஸ் லாரியில் 500 மூட்டை வரை தான் ஏற்ற முடியும். 5 லட்சம் நெல்மூட்டைகளை கொண்டு செல்ல பல லாரிகள் தேவைப்படும். எனவே மூட்டைகள் தேங்கிக்கிடப்பதாக குறை கூறுகின்றனர்.

குறுவை நெல்லை சாலையோரங்களில் தான் காய வைப்பார்கள். இதை, சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளதாக வேறுவிதமாக கூறுகிறார்கள். ஏதோ ஒரு சில இடத்தில் மழையில் நெல் நனைவதை பெரிதாக்கி விடுகின்றனர். விவசாயிகளை பீதியடையச் செய்யக்கூடாது.

ஒரே நேரத்தில் நெல் குவியும் போது ஓரிரு நாட்கள் சில பிரச்சினைகள் இருக்கும். இதில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சதிவேலை செய்யப்படுகிறது.

இந்த நெல்லை அரைத்துதான் பொதுவினியோக திட்டத்துக்கு பயன்படுத்துகிறோம். கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் முறைகேடுகள் செய்யக்கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் வாங்குவது ஒரு ரூபாய் என்றாலும், அது பாவகரமான, கேவலமான பணம். பணம் பெற்றதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் கொள்முதலுக்கு தேவையான பணம், 1.05 கோடி சாக்கு பை, சணல் எல்லாம் கையிருப்பில் உள்ளன. விவசாயிகளை அரசு கைவிடாது. அவர்கள் விளைவிக்கும் அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்யும்.

தி.மு.க. ஆட்சியில் ஒரு நிலையத்தில் நாளொன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. அதை ஆயிரம் மூட்டையாக உயர்த்தியுள்ளோம். அதற்கும் அதிகமாக வந்தால் மற்றொரு நிலையத்தை திறக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு அனுமதித்துள்ளது.

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் விடுமுறை இல்லாமல் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. குற்றச்சாட்டுகளை விவசாயிகள் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page