வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு டாக்டர்கள் எந்த நேரமும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை

Spread the love

வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு டாக்டர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவலை தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அந்தவகையில் கொசு ஒழிப்பு, வெள்ள அபாயம் ஏற்படும் போது, அதில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான மீட்பு குழு தயார் நிலை, உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

* மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்பினர், வருவாய் துறையினர், பேரிடர் மீட்பு துறையினர் உடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்

* மீட்பு வாகனங்கள், டாக்டர்கள் அடங்கிய மீட்பு குழு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் இதர சுகாதார துறை பணியாளர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணிகளுக்காக தயாராக இருக்க வேண்டும்.

* அரசு டாக்டர்கள் எந்த நேரமும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

* மருத்துவமனைகள், அரசு சுகாதார மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்த வேண்டும்.

* மேலும், ‘டார்ச் லைட்’ போன்ற அவசரகால மின்சாதனங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

* மருத்துவமனைகளில், தேவையான மருந்துகள், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பொதுமக்கள் தங்க வைக்கப்பட உள்ள மீட்பு முகாம்களில் கொரோனா மற்றும் மழைக்கால நோய் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ குழுவினர் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

* அந்த முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு மருத்துவ குழு தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும்.

* முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு தரமான குடிநீர், உணவு வழங்க வேண்டும்.

* நிவாரண முகாம்களில் திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வினியோகிக்கும் குடிநீரில், குளோரின் கலந்து வினியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* மழைக்கால காய்ச்சல் பரப்பும் கொசு புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்.

* மாவட்டந்தோறும் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில், மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு மையம் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* மேலும், ஒவ்வொரு பகுதியிலும் 3 தொற்று பரவல் கட்டுப்படுத்தும் குழுக்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

* அதேபோல் 3 அவசர கால மீட்பு குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு வானிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page