திருட்டு வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.க்கள் கொண்ட சிறப்பு குழு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Spread the love

மாணவர்களுக்கு இலவசமாக வழங்க பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் மாயமானது தொடர்பான வழக்குகளை, சைபர் கிரைம் போலீசார் மூலம் அறிவியல் பூர்வமாக விசாரிக்க வேண்டும் என்றும், இதற்காக ஐ.ஜி.க்கள் கொண்ட சிறப்பு குழுவை உருகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, அய்யம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.ஜெயக்குமார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, கொசுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.வசந்தி ஸ்டெல்லா பாய். இவர்கள் இருவரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.

அதில், கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அரசு வழங்கிய மடிக்கணினிகள் (லேப்-டாப்கள்) பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் அய்யம்பாளையம் பள்ளியில் இருந்து 31 மடிக்கணினிகளும், நத்தம் பள்ளியில் 26 மடிக்கணினிகளும் திருடப்பட்டு விட்டது என்றும், இதற்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசு தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எந்திரத்தனமான உத்தரவு

மனுதாரர்கள் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்பட்டதால், மடிக்கணினிகள் காணாமல் போய் உள்ளது என்று கூடுதல் அரசு பிளீடர் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு. இந்த 2 பள்ளிக்கூடங்களிலும் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் திருட்டு நடந்துள்ளது. திருடப்பட்ட மடிக்கணினிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட போலீசார் கூறிவிட்டனர். இதையடுத்து தமிழ்நாடு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தும் துறை, இந்த மடிக்கணினிகளுக்கு தொகை நிர்ணயித்துள்ளது.

இதனடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியர்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?, நிராகரிக்கப்பட்டதா? என்பதை கூறாமல், காணாமல் போன மடிக்கணினிகளுக்கு சுமார் ரூ.5.20 லட்சம் மனுதாரர் ஜெயக்குமாரும், சுமார் ரூ.4.36 லட்சம் மனுதாரர் வசந்தி ஸ்டெல்லா பாயும் செலுத்த வேண்டும் என்று எந்திரத்தனமாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதுமட்டுமல்ல தொகையும் எந்திரத்தனமாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, மனுதாரர்களுக்கு எதிராக அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்கிறேன். இந்த விவகாரத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கிறேன். அவர்கள், மனுதாரர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அவர்களது விளக்கத்தை பெற்று தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

ஐகோர்ட்டு மூலம் தப்பித்தல்

அதே நேரம், இதே போன்ற மடிக்கணினிகள் திருட்டு தொடர்பாக ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை எல்லாம் பார்க்கும்போது, மடிக்கணினிகள் பள்ளிக்கூடங்களில் திருடப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்படுகிறது.

போலீசும் திருட்டு போன மடிக்கணினிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் மடிக்கணினிகளுக்குரிய தொகையை செலுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. அதுவும், இந்த நடவடிக்கையில் இருந்து தலைமை ஆசிரியர்கள் தப்பித்துக்கொள்ளும் விதமாக பலவிதமான குறைபாடுகளுடன் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவர்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஐகோர்ட்டு வழியாக நடவடிக்கையில் இருந்து தப்பி விடுகின்றனர்.

புனிதமான நோக்கம்

இவ்வாறு பள்ளிகளில் காணாமல் போன மடிக்கணினிகளுக்கான தொகை அரசுக்கு சென்றடைவது இல்லை. இலவசமாக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மடிக்கணினிகள் அவர்களுக்கு சென்றடையவில்லை. போலீஸ் நிலையத்தில் கொடுக்கும் புகார் முதல் மடிக்கணினிக்கான தொகையை செலுத்தப்படி பிறப்பிக்கும் உத்தரவுகள் வரை அனைத்துமே குறைபாடுகளுடன், பலவிதமான ஓட்டைகளுடன், சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்பிடியில் இருந்து தப்பிக்க கூடியதாகவே உள்ளது.

நாட்டிலேயே தமிழ்நாடு தான் இணையதளம் வழி கல்விக்கு (இ-கல்வி முறைக்கு) முன்னோடியாக திகழ்கிறது. அதாவது இந்த கல்வி முறைக்கு நம் பாரதம் “நமஸ்தே” என்று சொல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு “வணக்கம்” என்று சொல்லி விட்டது. புனிதமான நோக்கத்துக்காக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வினியோகம் செய்யும், அடிமட்ட நிர்வாகத்தில் அதுபோன்ற நல்ல எண்ணம் இல்லை. பள்ளி வளாகங்களில் திருடுபோகும் மடிக்கணினிகளை கண்டுபிடிப்பதில் போலீஸ் அதிகாரிகளுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லை. மடிக்கணினிகளுக்குரிய தொகையை செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்படும் கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவிலும் அடிப்படை சட்ட நடைமுறைகளை கடைபிடிப்பது இல்லை. இந்த சூழ்நிலையில், அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 226, இந்த ஐகோர்ட்டுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கீழ் கண்ட உத்தரவுகளை பிறப்பிக்க விரும்புகிறேன்.

சிறப்பு குழுக்கள்

வடக்கு, தெற்கு மண்டல ஐ.ஜி.க்கள், பள்ளி கல்வித்துறை இயக்குனர், ஐகோர்ட்டு கல்வித்துறை சிறப்பு பிளீடர் ஆகியோர் கொண்ட ஒரு சிறப்பு குழுவை பள்ளி கல்வித்துறை செயலாளர் உருவாக்கவேண்டும். இந்த சிறப்பு குழு இலவச மடிக்கணினி திட்டம் அமலுக்கு வந்த 2012-ம் ஆண்டு முதல், காணாமல் போன மடிக்கணினிகள் குறித்து எத்தனை திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதில் எத்தனை வழக்குகளில் திருடுபோன மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இதுவரை மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்படாத வழக்குகள் எத்தனை? என்பதை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

பின்னர், இந்த வழக்குகளில் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தவறான நடைமுறையில், திருடுபோன மடிக்கணினிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் வழக்கை முடித்து வைத்திருந்தால், அதை ரத்து செய்து, மறு புலன்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திருடப்பட்ட மடிக்கணினிகளை அறிவியல் பூர்வமான முறையில் சைபர் கிரைம் போலீஸ் மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

அதேபோல, திருட்டுபோன மடிக்கணினிகளுக்குரிய தொகையை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வசூலிக்க சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கல்வித்துறைக்கு சிறப்பு அரசு பிளீடர் அறிவுரை வழங்கி உதவவேண்டும். இந்த சிறப்பு குழுவை 8 வாரத்துக்குள் உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் எவ்வாறு மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்து, மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு குழு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page