எம்.பி.பி.எஸ் ‘ரேங்க்’ பட்டியலில் முறைகேடு; மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி?

Spread the love

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ‘ரேங்க்’ பட்டியலில் வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதன் மூலம் அதில் முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை,

தி.மு.க. தொடர்ச்சியாக போராடியதால் கிடைத்த, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் வெளிமாநில மாணவர்களும் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வின் ஆறாத் துயரம் தமிழக மாணவர்களை ஒரு பக்கம் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியின் ஆசிகளுடன் நடக்கும் நீட் முறைகேடுகள் இன்னொரு பக்கம் மாணவர்களின் இதயத்தில் வேதனை தீயை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் 2-ம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ம் இடத்தில் இருக்கிறார். அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலுங்கானா மாநில ரேங்க் பட்டியலிலும் உள்ளன.

இருப்பிட சான்றிதழ் பெற்றது எப்படி?

ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்?

தெலுங் கானா, ஆந்திரா, கேரள மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழக ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்?. இவை அனைத்திற்கும் உரிய விளக்கம் அளிக்காமல் பொய்களை கட்டவிழ்த்து விட்டால்போதும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கரும், பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு வக்காலத்து வாங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மனப்பால் குடிப்பது அருவருக்கத்தக்கதும், அவமானகரமானதுமான செயல்.

தடையில்லா முறைகேடு

2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், நீட் தேர்வை அனுமதித்ததில் இருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்விலும், அதன் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு தயாரிக்கும் ரேங்க் பட்டியலிலும் முறைகேடுகளும், மோசடிகளும் தடையின்றி தொடர்கின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல், விளம்பரத்திற்காக கொரோனா காலத்திலும் நேரடி கலந்தாய்வு நடத்தி மாணவர்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்துவதே அ.தி.மு.க. அரசின் பொழுது போக்காக போய் விட்டது.

மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகளை உடனடியாக சரி செய்து, தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ள மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்வதோடு அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை நடத்தவேண்டும்

வெளிமாநில மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் யார் யார், அப்படி கொடுக்க சொல்லி பரிந்துரைத்த அமைச்சர்கள் யார் யார், பரிந்துரைக்கு பெற்ற பரிசு என்ன? என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கவனமாக செயல்படுவது மிக மிக முக்கியம். எனவே, கலந்தாய்வுக்கு வருவோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்திட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்து, ‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக’ மாறிவிடக் கூடாது என்றும், இது கமிஷன் வாங்கிக் கொண்டு விடப்படும் டெண்டர்கள் அல்ல, மாணவர்கள், பெற்றோரின் எதிர்காலம் என்பதை அ.தி.மு.க. அரசு குறிப்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page