தொடர் மழை: வெள்ளக்காடானது சென்னை – ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம்

Spread the love

‘புரெவி’ புயல் வலு இழந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடானது.


சென்னை,

வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.

இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் ‘நிவர்’ புயலை முன்னிட்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் முழுமையாக வடிவதற்குள், ‘புரெவி’ புயல் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியதால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மூலவர் சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் 4 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. அம்மன் சன்னதி, மூலநாதர் சன்னதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கோவிலுக்குள் வெள்ளம் புகுந்திருந்தபோதும் மூலவருக்கு வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வந்து, தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீட்சிதர்கள், நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் உள்ள சுரங்கங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் பரவனாற்றில் திருப்பி விடப்படுகிறது. இதுதவிர குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த மழையாலும் பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் கொளக்குடி காலனியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழைநீரில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோரை வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.

புரெவி புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் நேற்று 3-வது நாளாக கன மழை கொட்டியது. பாம்பனில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் குந்துகால் பகுதியில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

புயல் சின்னம் வலுவிழந்ததை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 7-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு, 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

அந்த வகையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு உள்ளது. மேலும் பூண்டி ஏரி மற்றும் சென்னைக்கு அருகே உள்ள மதுராந்தகம் ஏரி போன்றவற்றில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதைப்போல கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் வீராணம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 4,300 கனஅடி தண்ணீர் நேற்று வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரி 47 அடியை (மொத்த கொள்ளளவு 47.50 அடி) எட்டியது.

எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 3,000 கனஅடியும், வி.என்.எஸ். மதகு வழியாக 1,454 கனஅடி தண்ணீரையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டனர். மேலும் சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் அனுப்பிவைக்கப்படுகிறது. இதேபோல் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பெருமாள் ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு அதாவது இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page