கேரள சட்டசபையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: ஆதரவு தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

Spread the love

வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.


திருவனந்தபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மத்திய அரசுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் திரண்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய அரசு பல முறை விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் ஒரு நாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தை 23–ந் தேதி கூட்ட கேரள கவர்னர் ஆரிப் முகமது கானிடம் ஆளுங்கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அதற்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து விட்டார். இதற்கு ஆளுங்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 31–ந் தேதி (அதாவது நேற்று) மீண்டும் சட்டசபையை கூட்ட அனுமதி கோரும் வகையில் மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கேரள சட்டத்துறை மந்திரி ஏ.கே. பாலன் உள்ளிட்ட சில மந்திரிகள் கவர்னர் ஆரிப் முகமது கானை நேரில் சந்தித்து அனுமதி கேட்டனர். பின்னர் ஒரு வழியாக 31–ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னர் அனுமதி அளித்தார்.

இத்தகைய பரபரப்புக்கு இடையே நேற்று காலை 9 மணிக்கு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

கேரளாவில் ஒரேயொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான ஓ.ராஜகோபால் மட்டும் உள்ளார். அவர் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதே சமயத்தில் அவர் மத்திய அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்து கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் கூறியதாவது:–

சட்டசபையில் முதல்–மந்திரி பினராயி விஜயன் கொண்டு வந்த மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்கிறேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், தீர்மானம் பொதுவானதாகும். மக்களின் உணர்வுகளை மதித்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன். கேரள சட்டசபையில் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான அரசின் தீர்மானத்தை பா.ஜ.க. உறுப்பினர் என்ற முறையில் எதிர்ப்பது சரியல்ல. ஆதலால் குரல் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page