ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு; காணும் பொங்கல் அன்று கடற்கரைக்கு செல்ல தடை- தமிழக அரசு அறிவிப்பு

Spread the love

தமிழகத்தில் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுப்பாட்டை தளர்த்தி வழக்கமான நேரங்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 11 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 12-வது முறையாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரத்து 867 என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக்கூட்டங்களின் அடிப்படையிலும், 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும் தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நோய்கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது

அதாவது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில் போலீஸ் கமிஷனரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை உள்பட திரைப்பட தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்த வெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உச்ச வரம்பின்றி பணியாளர்கள் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். புதிய உருமாறிய நோய்க்கிருமி பரவாமல் தடுக்க, வெளிமாநிலங்களில் (புதுச்சேரி, ஆந்திரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை தவிர) இருந்து தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் இந்த தடை நீக்கப்பட்டு 14-ந் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கூடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த ஆண்டு காணும் பொங்கல் தினத்தன்று மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபடவேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே, அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page