சீனா அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள 2 கப்பல்களில் இருக்கும் இந்திய மாலுமிகள் 39 பேருக்கு அவசர உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீனாவுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

புதுடெல்லி,
சீனாவின் ஹெபேய் மாகாணத்தின் ஜிங்டாங் துறைமுகம் அருகே எம்.வி. ஜாக் ஆனந்த் என்ற இந்திய சரக்கு கப்பல் கடந்த ஜூன் 13-ந்தேதி முதல் நடுக்கடலில் நிற்கிறது. இதில் இந்திய மாலுமிகள் 23 பேர் உள்ளனர். இதைப்போல இந்திய பணியாளர்கள் 16 பேருடன் எம்.வி. அனஸ்தாசியா என்ற மற்றொரு சரக்கு கப்பல், சீனாவின் காவோபெய்டியான் துறைமுகம் அருகே கடந்த செப்டம்பர் 20-ந்தேதி முதல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
சரக்குகளை இறக்குவதற்காக சென்றுள்ள இந்த கப்பல்கள் துறைமுக அனுமதி கிடைக்காததால் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மாதக்கணக்கில் காத்திருக்கும் இந்த கப்பல்களில் இருக்கும் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக நீண்ட காலதாமதம் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.
இவ்வாறு இன்னலுக்குள்ளாகி இருக்கும் இந்திய மாலுமிகளுக்கு அவசர உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீனாவுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீண்ட தாமதம் காரணமாக கப்பலில் ஊழியர்களிடையே நிலவி வரும் கடுமையான சூழல் மற்றும் நீண்டுவரும் இந்த கடுமையான நிலைமை குறித்த தகவலை சீனாவிடம் தெரிவித்து இருக்கிறோம். இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
குறிப்பாக பீஜிங், தியான்ஜின், ஹெபேய் நகரங்களில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது. அத்துடன் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கவனித்து வருகிறது.
கப்பலில் சிக்கியிருக்கும் இந்திய மாலுமிகளுக்கு உதவுவதற்காக விருப்பம் தெரிவித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கைகளை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். கப்பலில் நிலவும் கடுமையான சூழலை கருத்தில் கொண்டு, இந்த உதவிகள் அவசரமாகவும், காலவரையறைக்கு உட்பட்டும், நடைமுறை சார்ந்தும் இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நங்கூரமிடப்பட்டு இருக்கும் இந்த கப்பல்கள் நகர்வதற்கு தாமதம் ஏற்பட்டு வருவதால் அவற்றில் இருக்கும் ஊழியர்களை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துறைமுகங்களில் உள்ளூர் நிர்வாகங்களால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியவில்லை என சீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் இத்தகைய மாற்று நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சீன அதிகாரிகளுக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.
இவ்வாறு அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.