போப் ஆண்டவரின் புத்தாண்டு செய்தி; உலக அமைதிக்காக பிரார்த்தனை

Spread the love

முதுகு வலி காரணமாக புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்காத போப் ஆண்டவர், மதிய நேர பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.


வாடிகன்,

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ், புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காதது இதுவே முதல் முறை ஆகும்.

புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காவிடினும், நேற்று மதியம் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் புத்தாண்டு செய்தியை வாசித்து ஆசி வழங்கினார். மேலும் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய உலக வாழ்வு என்பது போர், வன்மம் உள்ளிட்ட அழிவுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நமக்கு வேண்டியது அமைதி. அது ஒரு வரமாகும். இந்த பெருந்தொற்று காலத்தில் பிறரின் துன்பங்களை அறிந்து, ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் ஏமன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அவர், அங்கு சரியான கல்வி, மருத்துவம் ஆகிய அடிப்படை தேவைகள் இன்றி வாடும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page