ஹஜ் புனித யாத்திரை நிதியுதவியை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு, இஸ்லாமிய சமுதாய தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எல்லோருக்குமே ஒரு தவறான எண்ணம் தோன்றுகிறது. ஒரு கட்சியில் கூட்டணி வைத்தால், அவர்கள் சொல்வதுதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. தி.மு.க.வுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. காங்கிரசுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி தான் செயல்படுவார்கள். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அமைப்பது தான். தி.மு.க.வும். பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து, 5 வருடம் ஆட்சி செய்தார்களா, இல்லையா?
இப்போதும் சொல்கிறேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. இந்த மண்ணில் பிறந்த எந்த இஸ்லாமியரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு அரசாங்கம் முழு உத்தரவாதம் அளிக்கும். இந்த மண்ணிலே பிறந்த அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது எங்கள் அரசின் கடமை. அந்த கடமையில் இருந்து நாங்கள் தவற மாட்டோம்.
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்ல, கிறிஸ்துவ சமுதாயமாக இருந்தாலும் சரி, எந்த சமுதாயமாக இருந்தாலும் சரி, மனிதநேயத்தோடு பார்க்கின்ற கட்சி அ.தி.மு.க., ஒவ்வொருவருக்கும் அவர்களது மதம் புனித மதம். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும், எங்களால் முடிந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். ஹஜ் புனித யாத்திரை செல்ல மத்திய அரசு நிதியுதவியை ரத்து செய்தபோதும்கூட எங்களுடைய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கியது. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தபோதும்கூட அன்வர் ராஜா நிதியுதவியை உயர்த்தித்தர கோரிக்கை வைத்தார், அதையும் எங்களுடைய அரசு பரிசீலிக்கும்.
உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது எங்களுடைய அரசு. ரமலான் நோன்பின் போது கஞ்சி காய்ச்சுவதற்கு ஜெயலலிதா இருந்தபோதும், எங்களுடைய அரசும் விலையில்லா அரிசியை வழங்கி கொண்டிருக்கிறது. நாகூர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்கி கொண்டிருக்கிறோம்.
அதேபோல ஒவ்வொரு ஆண்டும், ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கின்றோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இஸ்லாமிய சகோதரருக்கு நாடாளுமன்ற மேலவையில் இடம் கொடுத்திருக்கின்றோம். இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்தெந்த வகையிலே உதவி செய்ய முடியுமோ, அந்தந்த வகையிலே உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு முழு பாதுகாப்பை கொடுக்கின்ற ஒரே அரசு. ஒரு தவறான எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை எடுத்துவிடுங்கள். அரசியல் செய்வது வேறு, மனிதாபிமானமாக பார்ப்பது வேறு. நாங்கள் மனிதாபிமானத்தோடு நேசிப்பவர்கள். இதை நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்.
தேர்தலில் வாக்களிப்பது, வாக்களிக்காமல் இருப்பது உங்களது சொந்த உரிமை. அதில் யாருமே தலையிட முடியாது. ஜனநாயகத்தின்படி இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உள்ளது. இருந்தாலும் எங்களை பற்றி தவறான எண்ணம் உங்களிடம் இருக்க வேண்டாம்.
இந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வர இருக்கிறது. இஸ்லாமிய பெருமக்கள் சிந்திக்க வேண்டும். எங்களுடைய அரசை பொறுத்தவரை மொழிக்கும், சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டது. அதுபோல அ.தி.மு.க. கட்சியும் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட கட்சி. வக்பு வாரியம் மூலமாகவும் நிறைய நன்மைகளை செய்ய சொல்லி இருக்கிறீர்கள். அவற்றையும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
தேவேந்திர குல சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் என்னை சந்தித்து, தேவேந்திர குல சமுதாய மக்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். அந்த பிரிவுகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நான் உடனடியாக இந்திய ஆட்சிப் பணி மூத்த அலுவலர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பல சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, இந்த சமூகத்தை சேர்ந்த 7 பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பொது பெயராக வைத்திட அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளேன். அதற்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும்.
பல ஆண்டுகளாக அந்த 7 உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும். நான் சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரியிடம் பேசி விரைவாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன். அவர்களும் இந்த பணியை ஆரம்பித்து விட்டார்கள். உங்களுக்கு சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்ற செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.