2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததில், கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கைவிட்டது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

புதுடெல்லி,
கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தனது ஒப்புதலை நேற்று வழங்கினார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:– எந்தவொரு நாடும் கொரோனா தடுப்பூசியின் 3–வது கட்ட கட்டாய பரிசோதனைகளை கைவிடவில்லை. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவனம் வேண்டும்.
நிபுணர் குழு முன் சமர்ப்பித்தபடி, 3–வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து தர மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இது ஒரு கட்டாய தேவை ஆகும்.
கட்டாயம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும், தேவைகளையும் கைவிட்டது தொடர்பாக சுகாதார அமைச்சகம் காரணங்களை கூற வேண்டும். ஏனென்றால் இது முன்னுரிமைபடி தடுப்பூசி போட்டுக்கொள்கிற முன்கள பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானது.
தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் கருத்து குழப்பமாக உள்ளது.
பெருந்தொற்றால் முடங்கியுள்ள நாட்டில் தடுப்பூசி இயக்கத்தின் உடனடி வருகை மற்றும் தடுப்பூசி உபயோகம் தொடங்குவது பற்றிய செய்தி, உண்மையிலேயே மேம்பட்டது. மறு உறுதி அளிக்கிறது. இந்தியாவை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக நிறுவியுள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ பாரத் பயோடெக், ஒரு முதல் தர நிறுவனம். ஆனால் 3–ம்கட்ட பரிசோதனைகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் ஏன் மாற்றி அமைக்கப்பட்டன என்பதற்கு சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பதில் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.