ஒரு நிமிடத்தில் கொரோனா முடிவுகள்: துபாயில் நடத்தப்பட்ட ‘பிரீத்லைசர்’ கருவியின் பரிசோதனை வெற்றி; சிங்கப்பூரில் பயன்படுத்த ஒப்புதல்

Spread the love

துபாயில் சுகாதார ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘பிரீத்லைசர்’ கருவியின் பரிசோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.


‘பிரீத்லைசர்’ கருவி

உலக அளவில் கொரோனா பரிசோதனைகள் பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் பிசிஆர் ஸ்வாப் பரிசோதனைகளில் இருந்து கொரோனா தொற்று உள்ளதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதில் இன்னும் துரிதமாக முடிவுகளை அறிந்து கொள்ளும் விதத்தில் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் சார்பில் மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் பிரீத்லைசர் என்ற கருவியை வடிவமைத்தது. இந்த கருவியை பரிசோதனை செய்ய துபாய் சுகாதார ஆணையம் முன் வந்தது.

கொரோனா பரிசோதனை
இதில் துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் முகம்மது பின் ராஷித் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பில் பல்வேறு நோயாளிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்ற பரிசோதனை சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் நாத் அல் ஹமர் ஆரம்ப சுகாதார மையத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு பிரீத்லைசர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 95 சதவீதம் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது.

பிரீத்லைசர் கருவியில் வாயில் வைத்து ஊதுவதுபோன்ற குழாய் அமைப்பு உள்ளது. இதில் வெளிப்புறத்தில் ஒருமுறை வாயில் வைத்து பயன்படுத்தும் ரப்பர் அமைப்பு உள்ளது. ஒருவழி குழாயில் மூச்சுக்காற்றை ஊதும்போது மூச்சுக்காற்றில் படிந்துள்ள கரிம பொருட்களின் அளவை கணக்கிட்டு அதன் மூலம் நோயை எதிர்த்து போராடும் திறன் அளவிடப்படுகிறது.

ஒரு நிமிடத்தில் முடிவு
சாதாரணமாக பிசிஆர் பரிசோதனைகளில் 48 மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பிரீத்லைசர் கருவிகள் ஒரு நிமிடத்தில் முடிவுகளை அறிவித்து விடுகிறது.

துபாயில் சுகாதார ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் சுகாதாரத்துறை அந்த நாட்டில் துரித கொரோனா பரிசோதனைகளுக்கு இந்த பிரீத்லைசர் கருவியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அமீரகத்தில் இந்த கருவியை பயன்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page