சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கும் விதத்தில் அமீரக விண்வெளி வீரர்களுக்கு நாசாவின் டி-38 ஜெட் விமானத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளி வீரர்கள் அலுவலக இயக்குனர் சயீத் கரமோஸ்த்தஜி கூறியதாவது:-
அமீரக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி
ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோர் அமீரகத்தின் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள். இதில் ஹசா அல் மன்சூரி கடந்த 2019-ம் ஆண்டில் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் அந்த விண்வெளி வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சியை பெறுவதற்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர். இதில் அமெரிக்காவின் விண்வெளி ஏஜென்சியான நாசாவின் கீழ் செயல்படும் ஜான்சன் விண்வெளி மையத்தில் அவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக மேம்படுத்தப்பட்ட சிறப்பு பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு நுட்பங்கள்
இந்த பயிற்சியில் விண்வெளி பயணத்தின்போது தாங்கள் அமர்ந்து பயணம் செய்யும் விண்கலத்தில் உள்ள இருக்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நுட்பங்கள் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல் தற்போது அமெரிக்காவின் அதிநவீன டி-38 ஜெட் விமான பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகிய இருவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமானத்தில் அதன் பாகங்கள், கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கருவிகள், அவசர காலத்தில் செய்யக்கூடிய செயல்பாடுகள், வேகத்தை அனுசரித்து செல்வது, தரையிறக்குவது, 5 கி.மீ. உயரத்தில் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விமானத்தை சரியான திசையில் திருப்புவது, மீட்பு இருக்கையை கையாளுவது ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.
ரோபோக்களை கையாளுதல்
சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் இந்த அதிநவீன ஜெட் விமானத்தை போன்றே ஒத்திருப்பதால் இந்த பயிற்சியானது அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தின் கணினி செயல்பாடுகள், புதிய கருவிகளை பொருத்துதல், அங்கு ரோபோக்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்வதன் மூலம் 2 விண்வெளி வீரர்களும் எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கி பல்வேறு பணிகளை செய்யும்
தகுதிகளை பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.