தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றம்

Spread the love

தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த பணிகளை தொடர்ந்து கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றும் பணிகள் செய்யப்படுகின்றன.

 

அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1,093 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீவிர தூய்மைப்பணி திட்டம்

சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணி திட்டத்தை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் என கண்டறியப்பட்ட 113 இடங்களில் நேற்று முன்தினம் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் 15 மண்டலங்களிலும் 264 டன் குப்பைகளும், 829 டன் கட்டிட கழிவுகளும் என மொத்தம் 1,093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கின்றன.

15 கண்காணிப்பு அலுவலர்கள்

இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து தீவிரப்படுத்தவும், மாநகராட்சியின் தூய்மையை பராமரிக்கவும், மண்டலங்களுக்கு ஒரு அதிகாரி வீதம் 15 மண்டலங்களுக்கு 15 கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மேற்கண்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நாள்தோறும் காலை நேரத்தில் ஆய்வு செய்து அது குறித்த விவரங்களை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த தீவிர தூய்மை பணி திட்டத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள், அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page