கொரோனா தடுப்பு பணியில் பாதிப்பு வருமா? தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தம் – கையிருப்பு தீர்ந்ததால் அரசு நடவடிக்கை

Spread the love

தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போதைய கையிருப்பாக 4.93 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதில் சுமார் 2.69 லட்சம் தடுப்பூசிகள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கும், 2.24 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குமான ஒதுக்கீடு ஆகும். நாளொன்றுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பார்க்கும்போது, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தேவையான தடுப்பூசிகள் நாளையுடன் (இன்று) முடிந்துவிடும். மாவட்ட ஒதுக்கீடு என்ற அளவிலும் தடுப்பூசிகள் முடிந்துள்ளன. எனவே நமக்கு கிடைத்த தடுப்பூசிகள் முழுமையாக பயன்படுத்தி முடிப்பதற்கான உரிய அறிவுரைகள் மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்த மாதம் (மே) நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 20.43 லட்சம். இதுவரை நமக்கு வந்தது 18.68 லட்சம். இன்றைய நிலவரப்படி, நமக்கு 1.74 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கவேண்டியது உள்ளது. அவை எப்போது வரும்? என்பதை இன்னும் நமக்கு சொல்லவில்லை.

மத்திய சுகாதாரத்துறை செயலாளருடனான காணொலிக்காட்சி கூட்டத்தில், ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தகவல் சொல்லியிருக்கிறது. ஆனால் முதல் சப்ளை ஜூன் 6-ந்தேதிக்கு பிறகும், இன்னொரு சப்ளை ஜூன் 9-ந்தேதி வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி என்பதால், தமிழகத்துக்கு படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கடந்த மாதத்தை விட 2 மடங்கு கூடுதலாக ஒதுக்கீடு அளிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஒதுக்கீடு ஜூன் 2-வது வார தொடக்கத்திலேயோ, அல்லது இம்மாதத்தில் 15 நாட்களுக்கு பிறகோ கிடைக்கப்பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தவகையில் முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். முன்பு சுணக்கம் காட்டியிருந்தாலும், தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். எனவே இந்த நேரத்தில் இது நமக்கு சவாலாக இருக்கப்போகிறது. எனவே இருக்கும் தடுப்பூசிகளை பிரச்சினையின்றி முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் வந்தவுடன் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கூடுதலாக தடுப்பூசிகளை மாநில அரசே கொள்முதல் செய்யுமா?

பதில்:- உலகளாவிய டெண்டரை தமிழகம் கோரியுள்ளது. இதன் நிலை குறித்து ஜூன் 6-ந்தேதிக்கு பிறகுதான் தெரியும். ரூ.3.5 கோடிக்கு ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கிறோம். மேலும் ரூ.1.5 கோடிக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம். 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசியை மாநில அரசே கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. அந்தவகையில் எவ்வளவு தடுப்பூசிகள் தமிழகத்துக்கு கிடைக்கும்? என்ற தகவல் சொல்லமுடியாது. இந்த மாதம் 13.85 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு ஒதுக்கீடு செய்து, அதில் 13.1 லட்சம் சப்ளை செய்திருக்கிறார்கள். எனவே நாம் ரூ.80 கோடிக்கு ஆர்டர் செய்தால்கூட நமக்கு என்ன ஒதுக்கீடு கொடுக்கிறார்களோ, அதற்கான விலையைத்தான் நாம் கொடுக்க போகிறோம். ஜூன் மாதம் 16.74 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

கேள்வி:- தடுப்பூசிகள் போடும் பணி தொய்வடையுமா?

பதில்:- இப்போதுள்ள தடுப்பூசிகள் முழுமையாக பயன்படுத்தப்படும் சூழ்நிலையில், அடுத்த சப்ளை வந்தால் தான் நாம் மக்களுக்கு தடுப்பூசி போடமுடியும். இதுதான் உண்மை. இதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லிவிட்டோம். இப்போதே பல மையங்களில் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்ட நிலை வந்திருக்கிறது. எனவே அந்த இடங்களில் தடுப்பூசிகள் போடும் பணியை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக நாளை மறுநாள் (நாளை) வரை தடுப்பூசிகள் போடமுடியும். எனவே ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை தடுப்பூசிகள் போடமுடியாது. அதேவேளை இந்த மாதம் (மே) வரவேண்டிய 1.74 லட்சம் தடுப்பூசிகள் வந்துவிட்டால் அவை நிச்சயம் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படும்.

கேள்வி:- ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் எப்போது தமிழகத்துக்கு வரும்?

பதில்:- ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தகவல் குறித்து தேசிய அளவில் இன்னும் தகவல் வரவில்லை. நாங்கள் கேட்டளவில், மொத்தமாக 3 லட்சம் டோஸ்கள் மட்டுமே மத்திய அரசுக்கு வந்துள்ளதாக தகவல் அளித்திருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தகவல் அளித்தபின்பு, அதுகுறித்து நாங்கள் தெரியப்படுத்துவோம்.

கேள்வி:- தடுப்பூசிகள் போடும் பணி சுணக்கத்தை சந்தித்தால் நோய் தடுப்பு பணிகள் பாதிக்கப்படுமா?

பதில்:- நமக்கு 2 மடங்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் ஜூன் 6-ந்தேதி வரை தடுப்பூசிகள் கிடைக்காது என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது. இருந்தாலும் முடிந்தளவு தடுப்பூசிகளை அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறோம். தடுப்பூசி போடும் பணிகளில் சுணக்கம் ஏற்படும் என்றாலும், நோய் தடுப்பு பணிகளில் எந்த சுணக்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். நோய்த்தொற்று இறங்குமுகமாக இருக்கும் மாவட்டங்களில் துரிதமாகவும், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களிலும் கூடுதல் கவனமாகவும் இருந்து நோய் தடுப்பு பணிகளை கையாள அறிவுறுத்தி இருக்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கட்டமைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் துரிதமாக பணியாற்றி வருகிறோம்.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

இந்த பேட்டியின்போது, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் விவரம் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவது எதனால்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியதாவது:-

கொரோனாவால் ஒருவர் உயிரிழக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் எந்த இடத்தில் இறந்தாரோ, அந்த இடத்தில் உள்ள குறிப்பிட்ட அரசு மையம் இறப்பு குறித்த தகவலை படிவம் 4-ல் பதிவிட வேண்டும். இதற்காக தலைமை செயலாளர்-ஆஸ்பத்திரி டீன்களுடன் ஆலோசித்து இருக்கிறோம். காலதாமதமான பதிவால் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். எனவே காலதாமதமான பதிவு சரிசெய்யப்படும். இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் உரிய சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் அளவு நடைமுறைகள் வகுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page