ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு: வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்

Spread the love

ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதிக்காததால், வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து சென்ற உருக்கமான சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது.

கொல்லம்,

கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகிற மே 3-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின் காரணமாக நோய்க்கிருமி வேகமாக பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

என்றாலும் சில சந்தர்ப்பங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துபுழா என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.ஜி.ஜார்ஜ். 89 வயது முதியவரான இவர் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு புனலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அவரை டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஜார்ஜின் மகன் ரோய்மோன், தந்தையை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

ஆட்டோ நடுரோட்டில் சென்று கொண்டிருந்த போது, போலீசார் தடுத்து நிறுத்தி, நகரில் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆட்டோ செல்ல அனுமதிக்க முடியாது என்றனர்.

அதற்கு ரோய்மோன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த தனது தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும், எனவே தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், ஆட்டோவை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

இதனால் செய்வது அறியாமல் தவித்த ரோய்மோன், வேறு வழியின்றி தனது வயதான தந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீட்டை நோக்கி நடந்தார்.

முதியவர் ஜார்ஜ் சட்டை அணியாததால் சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் அவர் தவித்தார். இதனால் ரோய்மோன் ஓட்டமும் நடையுமாக சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள வீட்டை சென்று அடைந்தார்.

அவர் தனது தந்தையை தோளில் சுமந்தபடி சென்ற காட்சியை சாலையில் சென்ற பலர் பரிதாபத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தனர். சிலர் இதை செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி ரோய்மோன் பின்னர் கூறுகையில், ஆஸ்பத்திரியில் இருந்த கொண்டு வந்த ஆவணங்களை காட்டியும் போலீசார் தங்களை ஆட்டோவில் செல்ல அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார்.

முதியவர் சென்ற ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்திய இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த கொல்லம் (ஊரகம்) போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கர், ஊரடங்கின் போது வாகனத்தில் செல்வதற்கான உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கவில்லை என்றார். அத்துடன், இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page