ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு மறுநாள், இந்த நிறுவனங்கள் 20-ந் தேதி முதல் செல்போன், டி.வி., லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி, ஆயத்த ஆடைகள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்வதற்கான ஆர்டர்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற தொடங்கின.
இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா நேற்று உத்தரவிட்டு உள்ளார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உரிய அனுமதியுடன், விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.
அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்பனை செய்வதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தது ஏன்? என்பது பற்றி மத்திய அரசின் தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தது போல், தங்களுக்கும் டி.வி., செல்போன் போன்றவற்றை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று உள்ளூர் கடைக்காரர்கள் வற்புறுத்தியதாகவும், இதைத்தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்களை விற்பனை செய்ய அனுமதிப்பது நாடு முழுவதும் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு செய்யும் அநீதி என்றும், எனவே இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும் நேற்று முன்தினம் மத்திய அரசை காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்களை விற்க தடை விதித்ததற்காக மத்திய அரசுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நன்றி தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பது சுமார் 7 கோடி வணிகர்களுக்கு செய்யும் அநீதி என்றும், எனவே அந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியது நியாயமானதுதான் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தாமதமானாலும் பிரதமர் காங்கிரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்றும் கூறி உள்ளார்.