மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களும் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டே செயல்படுகின்றன. பெரும்பாலான அதிகாரிகள் வீடுகளில் இருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
மத்திய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், சிறப்பு செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் கடந்த 13-ந்தேதி முதல் தங்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிகளை கவனிக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் அனைத்து அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த அலுவலகங்கள் நூறு சதவீத ஊழியர்கள் வருகையுடன் செயல்படுவதை துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி அனைத்து துணைச்செயலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் அலுவலகங்களுக்கு வந்து பணிகளை மேற்கொள்ள இருப்பதாக டெல்லியில் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மேற்கண்ட அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப 33 சதவீதம் பேர் வரை பணிக்கு வருவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள ஊழியர்கள், உடல்நலமற்றவர்கள் வீட்டில் இருந்து பணிகளை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.
அலுவலகங்களில் உரிய இடங்களில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும், கிருமி நாசினி திரவம் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அலுவலகங்களில் ஊழியர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமரவும், மதிய உணவு இடைவேளை மற்றும் ஷிப்டுகள் மாறும் சமயங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் மின்தூக்கியை (லிப்ட்) பயன்படுத்தாமல் படிகள் வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ராணுவம், மத்திய ஆயுதப்படை போலீஸ், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், பேரழிவு மேலாண்மை, இந்திய உணவு கழகம், சுங்கத்துறை, நேரு யுவ கேந்திரா, என்.சி.சி. அலுவலகங்களும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும்.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் துறை அலுவலகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்படும். குரூப்-ஏ மற்றும் குரூப்-பி பிரிவு அதிகாரிகள் தேவையான அளவுக்கு பணிக்கு வருவார்கள். குரூப்-சி மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் தேவைக்கு ஏற்ப 33 சதவீதம் அளவுக்கு பணிக்கு வருவார்கள்.
போலீஸ், ஊர்க்காவல் படை, சிறைத்துறை, பேரழிவு மேலாண்மை, தீயணைப்பு துறை ஆகியவை கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி செயல்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.