தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவு துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஈரானில் சிக்கித்தவிப்பவர்களில், லடாக், காஷ்மீர், மராட்டியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1,100 யாத்ரீகர்களும் அடங்குவர். இதுதவிர, காஷ்மீரை சேர்ந்த 300 மாணவர்கள், கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரம் மீனவர்கள் ஆகியோரும் தங்கள் படிப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்காக நீண்ட நாட்களாக தங்கி இருக்கின்றனர். மீனவர்கள், அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் இருக்கின்றனர்.
900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கியுள்ளனர். அவர்களுள், 700 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதுபற்றி மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 11ந்தேதி நாடாளுமன்ற மேலவையில் பேசும்பொழுது, இத்தாலி, ஈரானில் தவித்து வரும் இந்தியர்களை உரிய பரிசோதனைக்கு பிறகு இந்தியாவுக்கு அழைத்து வர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என கூறினார்.
இந்நிலையில், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேர் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.