55 வயதுக்கு மேற்பட்டவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கொரோனா பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
போலீசாருக்கு கமிஷனர் 9 அறிவுரைகள்- கொரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை
போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன்
சென்னை:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்னை மாநகர போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
பணியில் இருக்கும் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகரில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ்
போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் கொரோனா விழிப்புணர்வுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறி இருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அனைத்து போலீசாரும் கொரோனா பாதுகாப்பு அறிவுரைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் 9 அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
* அனைத்து போலீசாரும் கட்டாயம் முகக்கவசம், கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* வாகன தணிக்கையின்போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
* போலீஸ் வாகனங்கள், காவல் நிலைய மேஜை, நாற்காலி ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பதுடன் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இது பற்றிய கால அட்டவணையையும் பராமரித்து கடைப்பிடிக்க வேண்டும்.
* போலீசார் அனைவரும் சுகாதாரமான வீட்டு உணவுகளையே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அந்தந்த போலீஸ் சரகத்திலேயே உணவுகளை சமைக்க வேண்டும்.
* 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* போலீசாருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறையினர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு, ஊர்க்காவல் படை உள்பட அனைத்து பிரிவு போலீசாரின் உடல் நிலையை உயர் காவல் அதிகாரிகள் கண்டிப்பாக உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.