ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உயரும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்தது.
மேலும், 36 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக உயர்வதற்கு 3.4 நாட்கள் ஆனது. ஆனால், அதன்பிறகு இரு மடங்காக உயர சராசரியாக 7.5 நாட்கள் ஆகிறது. எனவே, பாதிப்பின் வேகம் குறைந்துள்ளது.
சில மாநிலங்களில், 20 நாட்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு ஆகியுள்ளது. டெல்லியில் 8.5 நாட்களிலும், கர்நாடகாவில் 9.2 நாட்களிலும், தெலுங்கானாவில் 9.4 நாட்களிலும், ஆந்திராவில் 10.6 நாட்களிலும், காஷ்மீரில் 11.5 நாட்களிலும், பஞ்சாபில் 13.1 நாட்களிலும், சத்தீஷ்காரில் 13.3 நாட்களிலும், தமிழ்நாட்டில் 14 நாட்களிலும், பீகாரில் 16.4 நாட்களிலும் இருமடங்காக உயர்ந்துள்ளது.
அந்தமான், அரியானா, இமாசலபிரதேசம், அசாம், சண்டிகார், உத்தரகாண்ட், லடாக் ஆகிய மாநிலங்களில் 21 முதல் 30 நாட்களுக்குள் பாதிப்பு இருமடங்கு ஆகியுள்ளது. ஒடிசாவில் 39.8 நாட்களும், கேரளாவில் 72.2 நாட்களும் ஆன பிறகே இருமடங்காக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியின் மாகே பகுதி, கர்நாடகாவின் குடகு பகுதி, உத்தரகாண்டின் பவுரி கார்வால் மாவட்டம் ஆகியவற்றில் கடந்த 28 நாட்களில் புதிதாக ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. 23 மாநிலங்களில் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை.
கோவா மாநிலத்தில், கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.