இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து தனது கரத்தை விரித்துக்கொண்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் உடலுக்குள் புகுந்து வருகிறது. வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கும் கொரோனா தினந்தோறும் ஏராளமானோரை பாதித்து வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சரகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 14-ந்தேதி 1,463 பேர் பாதிக்கப்பட்டதே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் புதிதாக 40 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 559 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக உயிரிழப்பையும், பாதிப்பையும் சந்தித்து வரும் மராட்டியத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 4,200 ஆகிவிட்டது. இதில் 3,000-க்கும் அதிகமானோர் மாநில தலைநகர் மும்பையில் வசிப்பவர்கள் ஆவார்கள். இதன் மூலம் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மும்பை உள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடிசை பகுதியான தாராவியில் மட்டும் 160-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அங்கு 11 பேரின் உயிரையும் கொரோனா காவு வாங்கிவிட்டது.
2-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் இந்த வைரஸ் 2,000-க்கும் அதிகமானோரை பாதித்துள்ளதுடன், 45 பேரின் உயிரையும் பறித்துள்ளது. குஜராத்தில் 1,800-க்கும் அதிகமானோரும், ராஜஸ்தானில் 1,530-க்கும் மேற்பட்டோரும் இந்த வைரஸ் பிடியில் சிக்கி உள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. புதிதாக 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,520 ஆக அதிகரித்து உள்ளது.
ஆந்திராவில் இந்த வைரஸ் 720-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் தலா 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.