இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்

Spread the love

கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம் நடத்தினார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கி உள்ளது. இந்த வைரஸ், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றும் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள் அணிந்து கொள்ள வேண்டிய பி.பி.இ. என்று சொல்லப்படக்கூடிய சுய பாதுகாப்பு சாதனங்களுக்கு அங்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது அங்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில், முன் வரிசையில் நின்று, உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிற சுகாதார பணியாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த மீனல் விஸ் என்ற 6 மாத கர்ப்பிணி டாக்டர், அதிரடியாக லண்டன் நகரில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள டவுனிங் வீதிக்கு வந்தார். அவர், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அணிகிற சீருடையும், முக கவசமும் அணிந்து இருந்தார்.

அவர், “சுகாதார பணியாளர்களை காப்பாற்றுங்கள்” என்ற கோரிக்கை வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி வந்து போராட்டம் நடத்தினார். சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டைப் போக்கி, சுகாதார பணியாளர்களை காப்பாற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.

27 வயதான டாக்டர் மீனல் விஸ், “இதில் அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கூறினார். இவர் இங்கிலாந்து அரசின் என்.எச்.எஸ். துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பி.எம்.ஏ. என்று அழைக்கப்படக்கூடிய பிரிட்டிஷ் டாக்டர்கள் சங்கம், என்.எச்.எஸ். அறக்கட்டளை ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு சாதனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை கவலையுடன் எடுத்துக்கூறி மேற்கொண்டு வருகிற பிரசார இயக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த தருணத்தில் டாக்டர் மீனல் விஸ், பிரதமர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்தியது ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. பிரிட்டிஷ் டாக்டர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் இதுபற்றி கூறுகையில், “ துருக்கியில் இருந்து சுகாதார பணியாளர்களுக்கான சுய பாதுகாப்பு சாதனங்கள் வந்து சேருவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு இப்போது சரியான, பயனுள்ள பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்கிய பல நோயாளிகளை கவனிக்க வேண்டிய ஆபத்தான பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் குறிப்பிடத்தக்க எண்ணிக் கையிலான டாக்டர்கள் போதுமான சுய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாத சூழலில் பணியாற்றுகிற நிலைதான் இருக்கிறது என்பதை எங்கள் சங்கம் கவலையுடன் கண்டறிந்துள்ளது. உண்மையிலேயே இது வாழ்க்கைக்கும், இறப்புக்குமான போராட்டமாக அமைந்துள்ளது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page