இந்தியாவின் புதிய அந்நிய நேரடி முதலீட்டிற்கான (எஃப்டிஐ) புதிய கொள்கையானது உலக வா்த்தக அமைப்பின் தடையற்ற வா்த்தக கொள்கைகளை மீறுவதாக உள்ளது என சீன தூதரக செய்தித் தொடா்பாளா் ஜி ரோங்க் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தங்கள் நாட்டில் செயல்படும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கு அரசிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும் என நில எல்லையை பகிா்ந்து கொண்டுள்ள நாடுகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த புதிய விதிமுறை, உலக வா்த்தக அமைப்பின் தடையற்ற வா்த்தக கோட்டுபாடுகளை மீறுவதாக உள்ளது.
சுதந்திரமான, நியாயமான மற்றும் சமமான வணிகச் சூழலைப் பேணும் அதேவேளையில், இந்தியா இந்த பாகுபாடான நடைமுறைகளை திருத்திக் கொண்டு பல்வேறு நாடுகளின் முதலீடுகளை சமமாக பாா்க்கும் என்று சீனா நம்புகிறது.
இந்தியாவின் தொழில் வளா்ச்சி மேம்பாட்டுக்கு சீனாவின் முதலீடு உந்து சக்தியாக திகழ்கிறது. குறிப்பாக, செல்லிடப்பேசி, வீட்டு மின் சாதனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமொபைல் துறையில் சீன முதலீடு இன்றியமையாதது. அதன் மூலம் இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பரஸ்பர நன்மைகளை ஊக்குவிக்கவும், இருதரப்பும் ஒத்துழைப்புடன் செயல்படும் சூழலை உருவாக்குவதற்கும் சீனாவின் முதலீடு அடிப்படையாக உள்ளது என்றாா் அவா்.