பலருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் இருப்பதால் அவர்கள் நோய் தென்படுவதற்கு முன்பே ஏராளமான பேருக்கு நோயை பரப்பி விடுகிறார்கள். இது பெரிய சவாலான விஷயமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
அறிகுறி இல்லாமல் பரவி சவால் விடும் கொரோனா
புதுடெல்லி:
இந்தியாவில் பல மாநிலங்களையும் கொரோனா பரவுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே நோய் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 65 சதவீதம் பேருக்கு முதலில் அறிகுறி தென்படவில்லை. அதேபோல உத்தரபிரதேசத்தில் 75 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை.
அதிகமாக நோய் பாதித்துள்ள 10 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்குகள்படி 3-ல் 2 பேருக்கு அறிகுறி இல்லாமலேயே நோய் பரவி உள்ளது.
அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 82 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. டெல்லியில் நேற்று ஒரு நாளில் மட்டுமே அறிகுறி இல்லாத 186 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அரியானா, கர்நாடகா மாநிலங்களும் ஏராளமான நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை.
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மாணவி ஒருவர் கொரோனா நோயாளிகளுடன் ரெயிலில் பயணம் செய்தார். அவருக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகித்து 22 நாட்கள் தனிமையில் வைத்திருந்தனர். அதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை. அதன்பிறகு அவருக்கு நோய் தாக்கி இருப்பது உறுதியானது.
இவ்வாறு பலருக்கும் அறிகுறி இல்லாமல் இருப்பதால் அவர்கள் நோய் தென்படுவதற்கு முன்பே ஏராளமான பேருக்கு நோயை பரப்பி விடுகிறார்கள். இது பெரிய சவாலான விஷயமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.
இதுசம்பந்தமாக பெங்களூரூ ராஜீவ்காந்தி மார்பக நோய் ஆஸ்பத்திரி நிபுணர் நாகராஜன் கூறும்போது, பொதுவாக இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் அதிகம் கொண்டவர்கள். அறிகுறிகள் தென்படுவது குறைவாக இருக்கும். குறிப்பாக 20-லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பார்கள்.
எதிர்ப்பு சக்தி முறியடித்து கொண்டிருப்பதால் முதலில் அவர்களுக்கு அறிகுறிகள் தென்படாது என்று கூறினார்.
சென்னை தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் நிபுணர் மனோஜ் முர்கேகர் கூறும்போது, தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியாமலேயே பலர் நோயை பரப்புவது அதிகமாக உள்ளது. நோய் அறிகுறி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே 40 சதவீதம் பேருக்கு நோயை பரப்பி விடுகிறார்கள் என்று கூறினார்.
இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் இயக்குனர் கங்குலி கூறும்போது, அறிகுறி இல்லாமல் பரவுவதால் அதை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
நோய் தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகுதான் பலருக்கு அறிகுறியே தென்படுகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்துதல் அதிக காலம் நீடிக்க வேண்டும் என்று கூறினார்.