கொரோனா வைரஸ் பரவல்… அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு உகான் ஆய்வகம் விளக்கமளித்து உள்ளது.
பெய்ஜிங்
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனாவின் உகானில் உள்ள கடல் உணவு சந்தையில் உருவானதாக கூறப்பட்டது. இதையடுத்து மூடப்பட்ட உகான் கடல் உணவு தற்போது வரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது. என்று அமெரிக்காவின் டெலிவிஷன் பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்று வெளியான தகவலை தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
கொரோனா வைரஸின் மரபணுத்தொகுதி குறித்து சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நுண்ணுயிரியல் துறை வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வானது இயற்கை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு முடிவின்படி கொரோனா வைரஸ், திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனித உடலின் செல்களை துளைப்பதற்கான வைரஸில் இருக்கக் கூடிய, கூர்மையான கொக்கி போன்ற புரத அமைப்பு, இயற்கை தேர்வு முறையிலேயே உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் விலங்குகளிலேயே புதிய வடிவில் பரிணமித்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம், அல்லது நோய் ஆபத்தற்ற வடிவில் மனிதர்களுக்கு பரவி, மனித உடலில் புதிய கொரோனா வைரஸாக பரிணமித்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி இருந்தனர்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து சீன ஊடகத்திடம் பேசியுள்ள உகான் ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே தவறு. இதெற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கப்போகிறது. இந்த தியரிகள் எல்லாம், உலகளவில் விஞ்ஞானிகளுக்கு இடையேயான உறவை பிரிக்காது என்று நம்புகிறோம்.
இந்த ஆய்வகத்தில் என்ன மாதிரியான ஆய்வுகள் நடக்கிறது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். வைரஸ்கள் மற்றும் மாதிரிகளை எப்படி கையாளுவது என்றும் தெரியும். எங்களிடம் இருந்து வைரஸ் வெளியே வர எந்த வழியும் இல்லை என கூறினார்.