வேலைவாய்ப்பை பாதுகாக்க அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற்றம் நிறுத்திவைப்பு – டிரம்ப் அறிவிப்பு

Spread the love

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க, அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற்றத்தை நிறுத்தி வைப்பேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ், உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. உலகிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.

அதனால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த வார நிலவரப்படி, 2 கோடியே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், வேலைவாய்ப்பின்மைக்கு வெளிநாடுகளில் இருந்து குடியேறுவோர்தான் காரணம் என்று முத்திரை குத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பது அவசியம். எனவே, வெளிநாட்டவர் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? எத்தனை நாடுகள் பாதிக்கப்படும்? என்பது இனிமேல்தான் தெரியும் என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் தனது அறிவிப்பில், குடியேற்ற விசா பற்றித்தான் குறிப்பிட்டுள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளிடையே பிரபலமான எச்-1பி விசா என்பது குடியேற்றம் அல்லாத விசா ஆகும்.

ஆனால், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் டிரம்ப் கூறியிருப்பதால், எச்-1பி விசாவையும் அவர் குறிவைத்துள்ளதாக கருதப்படுகிறது. அப்படி அவர் செயல்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க வடக்கு, தெற்கு எல்லைகளை டிரம்ப் ஏற்கனவே மூடிவிட்டார். சீனா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பா நாட்டினர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விசா வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் இந்திய வம்சாவளி செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஏராளமானோர் பலியாகி விட்டனர். தற்போது, கொரோனாவை அரசியலாக்கி, குடியேற்றத்துக்கு எதிரான தனது கொள்கையை திணிக்க அவர் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page