வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறி விடக்கூடாது என்பதற்காக மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இந்த வாகனங்களில் உள்ள டிரைவர், கிளனர் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்ய பரிசோதனை முடிவு சான்றிதழை அவர்கள் கொண்டு வரவேண்டும்.
ஆனால், இந்த சான்றிதழை தமிழக அரசு அதிகாரிகள் பரிசோதிப்பது இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் டிரைவர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது’ என்றார்.
இதையடுத்து, விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற மே 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.