புதுடெல்லி,
மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஒரே சீராகவோ சற்று முன்னே பின்னேயோ உள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் விட எவ்வளவோ சிறப்பான நிலையில் இந்தியா இருக்கிறது. நமது உத்திகள், இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறிப்பிட்ட அளவுக்கு பரவாமல் தடுக்க உதவி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்கள் குணம் அடைகிற விகிதாசாரமும் சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ இது 20 சதவீதமாக உள்ளது. நாட்டில் 21 ஆயிரத்து 393 பேருக்கு பாதிப்பு இருக்கிறது. அதே நேரத்தில் 4 ஆயிரத்து 257 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் (நேற்றுமுன்தினம்) 388 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.
கடந்த 14 நாட்களில் 8 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை. இத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,409 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்துள்ளது. இதன்மூலம் தற்போது செயலில் உள்ள (சிகிச்சையில் உள்ள) கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பரிமாற்றத்தை குறைக்க முடிந்திருக்கிறது. இந்த தொற்றுநோய் பரவுவதை குறைக்க முடிந்திருக்கிறது. நமது பரிசோதனை அளவையும் தொடர்ந்து அதிகரிக்க முடிந்துள்ளது. இந்த (ஊரடங்கு) நேரத்தை எதிர்கால சவால்களுக்கு நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள பயன்படுத்த முடிந்துள்ளது.
கடந்த 30 நாட்களில், கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கிறது.
மேலும், தொற்றுநோய் பரவுவதில் திடீரென அதிவேகம் எடுக்கவில்லை.
கடந்த மாதத்தில் சோதனைகளின் எண்ணிக்கையும், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தியதில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவை விட தென்கொரியாவில் சிறப்பாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் தனியார் துறையையும், மாவட்டங்களையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்து முன்னணியில் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் சோதனை தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம். பொது மற்றும் தனியார் துறையில் அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி இருக்கிறோம். பொதுத்துறையையும், தனியார் துறையையும் கொரோனா வைரசுக்கு எதிராக போரிடுவதில் நாங்கள் பரவலாக்கி இருக்கிறோம். இனி வரக்கூடிய நாட்களில் பரிசோதனையை மேலும் அதிகரிப்போம்.
அரசாங்கத்தின் முதல் குறிக்கோளானது, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு அரசாங்க ஆஸ்பத்திரியை நாட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதாகும். இது, சமூக இடைவெளியை பராமரித்தல், ஊரடங்கை கடைப்பிடித்தல், முதியோர் நலனில் கவனத்தை செலுத்தல் போன்றவற்றின் மூலம் சாதித்து காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.