புதுடெல்லி,
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. இன்றளவும் இந்த தொற்று நோயை குணப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள சமூக விலகல் மட்டுமே கை கொடுக்கும் என்பதால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
ஆனால் கொரோனா வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்து, வீட்டில் இருந்து வெளியேறுபவர்களை குறிவைத்து தொற்றிக்கொள்கிறது. இதனால் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரம், இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் 21,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது. கொரோனாவால் 686 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 700-ஐ நோக்கி நகருவது தெரிகிறது.
நாட்டில் கடந்த 4 நாட்களாக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 4,324 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், 16,689 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நம்பிக்கை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் மீண்டு வருகிறார்கள். நோய் அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்கு வர தயங்குகிறார்கள். தாமதம் உயிரிழப்பை அதிகரிக்க வழிவகுக்கும் என்றார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துவிட்டது. அங்கு 269 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துவிட்டது. 2,400-க்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குஜராத் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் இந்த வைரசால் 2,200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தானில் இந்த எண்ணிக்கை 1,900-ஐயும், மத்திய பிரதேசத்தில் 1,600-ஐயும் நெருங்கிவிட்டது.
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629-ல் இருந்து 1,683 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ நோக்கி செல்கிறது.