சென்னையில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு – மாநகராட்சி அறிவிப்பு

Spread the love

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மாநகர பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகள் உள்பட 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

அம்மா உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதிய வேளைகளில் சாம்பார் சாதம், மல்லி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் தலா ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலை வேளையில் சப்பாத்தி ரூ.3-க்கு (2 எண்ணிக்கை) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்க அம்மா உணவகங்கள் பெரிதும் கைகொடுத்து வந்தன. அதுதவிர பாத்திரங்களிலும் சாப்பாடு வழங்கப்பட்டு வந்தன.

ஊரடங்கு காலத்தில் சில அம்மா உணவகங்களில் ஏழை-எளியோருக்கு இலவசமாக உணவுகள் வினியோகிக்கப்பட்டு வந்தன. இதற்கான செலவை அரசியல் கட்சி பிரமுகர்களும், தன்னார்வலர்களும் ஏற்று உதவி வந்தனர். இதற்கிடையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கவேண்டும் என்றும், அதற்கு உதவி புரிய தயாராக இருப்பதாகவும் தன்னார்வலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘மக்கள் நலன் கருதி சென்னையில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களிலும் இன்று (நேற்று) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினந்தோறும் 3 வேளைகளும் இலவச உணவு வழங்க வேண்டும். இலவச உணவு வழங்கக்கோரிய தன்னார்வலர்களிடம் அம்மா உணவகத்தில் பணிபுரியும் சுய உதவி குழுக்கள் அதற்கான தொகையை பெற்று வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும்‘, என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த தகவல் தெரியாமல் நேற்று அம்மா உணவகங்களில் சாப்பிட வந்த மக்கள் காசு கொடுத்து டோக்கன் வாங்க முயன்றனர். அப்போது இலவச உணவு திட்டத்தை ஊழியர்கள் தெரிவிக்க அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டு சென்றனர்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். “ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் நிலைமையை உணர்ந்துகொண்டு இலவச உணவு திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இது நிச்சயம் வரவேற்புக்குரியது”, என்று மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page