சென்னை,
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மே 3-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதி, கட்டுப்பாடு உத்தரவிடப்படாத பகுதிகளில் கூடுதலாக சில நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதனடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க முன்மொழியப்பட்ட பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதன்படி, கட்டுப்பாட்டு பகுதிகள், சிகப்பு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பாக நடக்கும் மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வரும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அங்கு பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் முககவசம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். தேவைப்படும் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் பணியாளர்கள் இருக்கக் கூடாது. கண்டிப்பாக, சமூக இடைவெளி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
பாசன பணிகள், ஏரிகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ஊரகப்பகுதியில் உள்ள கட்டுமான திட்டப் பணிகள், அணைகள் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள்,
சாலை மற்றும் பாலங்கள் கட்டுமானம், குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள், செங்கல் சூளை, ஹார்ட்வேர் பொருட்கள் சப்ளை (அழைத்தால் மட்டும்), மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகம் தொடர்பான பணிகள்,
அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகப் பணிகள் (33 சதவீத ஊழியர்களைக் கொண்டு) ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன.
இந்த குறிப்பிட்ட கூடுதல் பணிகளை அனுமதிப்பதற்கு முன்பு, அனைத்து ஏற்பாடுகளும் சரியான முறையில் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையையும், வளர்ச்சியையும் கண்காணித்து மேலும் சில முடிவுகளை எடுக்கும்படி தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்த விதிவிலக்கு தொடர்பான அறிவிப்பாணையின் அடிப்படையில் தமிழக அரசு மார்ச் 25-ந் தேதி பிறப்பித்த அரசாணையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதி உள்ளார்.
அதன் அடிப்படையில் அந்த அரசாணையில் சில மாற்றங்களை கொண்டு வந்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி, குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், மூத்த குடிமக்கள், கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் நல இல்லங்கள், வீடுகளுக்குச் சென்று படுக்கையில் கிடக்கும் நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சேவையாற்றும் உதவியாளர் ஆகியோர் செயல்படலாம்.
நகர்ப்புறங்களில், அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி, மொத்த விற்பனை, சில்லரை விற்பனை கடைகள், பெரிய செங்கல் கடைகள், பிரட் தொழிற்சாலைகள், பால் உற்பத்தி நிறுவனங்கள், மாவு, பருப்பு மில்கள் போன்ற உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் இயங்கலாம்.
சிலவகை ஏற்றுமதிகள், தோட்டக்கலை உற்பத்தி ஆய்வு மற்றும் சிகிச்சை பணிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.