சென்னை உள்பட 5 நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது.
புதுடெல்லி,
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநிலங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது? என்பது குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. இதன் காரணமாக கொரோனா அதிகமாக பரவி பொது சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தின் சென்னை, குஜராத் மாநிலம் ஆமதாபாத், சூரத், மராட்டிய மாநிலம் தானே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதாக (‘ஹாட் ஸ்பாட்’) கண்டறியப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்ததால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சகங்களுக்கு இடையேயான 6 உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நிலைமையை நேரில் ஆய்வு செய்தன. அந்த மாவட்டங்களில் கொரோனோ பரவுவதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் வழங்கி இருக்கின்றன.
இதேபோல் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள சென்னை, ஆமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக கூடுதல் செயலாளர்கள் தலைை-மையிலான 4 உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்து இருப்பதாகவும், இந்த குழுக்கள் அந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி மத்திய அரசு அதிகாரி டாக்டர் திருபுகழ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது.