மனிதன் துப்பும் எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தால் அதை விட்டுவிட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பொது இடத்தில் எச்சில் துப்பும் பழக்கத்தை இப்போது விட்டுவிட வேண்டும்: மன் கி பாத்தில் பிரதமர் வலியுறுத்தல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதனடிப்படையில் இன்று மக்களுக்கு உரையாற்றினார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருதால் இதுகுறித்து பேசினார்.
‘‘இந்த போரில் குடிமக்கள் அனைவரும் போர் வீரர்கள் போல் செயல்படுகின்றனர். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை நமது விவசாயிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். சிலர் வாடகையை தள்ளுபடி செய்துவிட்டனர். பள்ளிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அந்த பள்ளியை தூய்மைப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் மாஸ்க்குகள் தயாரித்துக் கொடுக்கின்றனர். நாடு சரியான பாதையில் செல்கிறது’’என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்புவதன் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் அந்த பழக்கத்தை தற்போது விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் ‘‘பொது இடத்தில் எச்சில் துப்பினால் அது கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. தற்போது பொது இடத்தில் எச்சில் துப்பும் இந்த பழக்கத்தை தற்போது விட்டுவிட வேண்டும்’’ என்றார்.